Wednesday, April 11, 2012

ஸ்விஸ் வங்கிப் பணம்

கருங்குகைக்குள்
அடைபட்டுக்கிடக்கும்
வண்ணப்புறாக்களே

உங்களை அடைத்தவர்
மனம் நிம்மதிப்
பெருமூச்சு விட்டு
ஓய்வில் மறைகிறது

விடுதலைக் காற்று
வீசவே வீசாதா
கவலை வேண்டாம்
காலம் கனிந்து வரும்
காத்திருங்கள்

அற்புத விளக்கோடு
அலாவுதீன் வரலாம்
எப்போது என்றுமட்டும்
கேட்காதீர்

திருடனாய்ப் பார்த்து
திருந்தும் நாள் வரும்
நம்புங்கள்
பொருமைமட்டும்
காத்திடுங்கள்
வேறென்ன சொல்ல
சுவிஸ் வங்கிக்
கறுப்புப் பணமே.


 
  
 
      

     

வாழ்வு

நினைவென்னும்
பசுமை நிறை 
அழகுச் சோலையில்
அங்குமிங்குமாகப்
பறந்திடும்
இளந்தளிர் நிலவுகள்
அன்பெனும் குளத்தில்
அவர்களுடைய அன்பின்
சாட்சிகளாயிருந்தன.

சில நேரங்களில்
அவை மலைகளின்
மறைவில் மறைந்தும்
அன்பெனும்
ஊஞ்சலில் ஆடியும்
அகமகிழ்ந்து
திளைத்திருந்தன.

ஆனால் இப்போதோ
சரியான புரிதலின்றி
அந்த அழகு நிலவுகள்
மழை மேகங்களால்
மறைக்கப்பட்டு
இடியும் மின்னலுமாய் 
இடித்து நொடித்து
துன்ப அலைகளில் 
கரைந்து
விவாகரத்தில்
முடிந்துவிட்டன.

 
 
  
    
  
     
      
  

வாழ்கிறேன்

கலைந்துபோன
கனவுகளைக்
கல்லறையாக்கி
வாழ்கிறேன்

பொய்யென்ற
கண்ணீரிலே
நனைந்து
வாழ்கிறேன்

பொருளில்லா
விவாதங்களின்
கனவாக
வாழ்கிறேன்

வரமாட்டாய் நீ
எனத் தெரிந்தும்
நாட்களை
எண்ணியெண்ணி
குமைந்து
வாழ்கிறேன்

தனியாக
விட்டுச்சென்றவனே
உன் காலடியோசையின்
இருட்டிலும் தான்
வாழ்கிறேன் நான்.
    
          
  


  

Tuesday, April 10, 2012

காத்திருக்கிறேன் இறைவா





  








வானமென்னும்
வீதியிலே
வண்ணத்தாரகையாய்
நீந்திட
ஆசை

நேரமென்னும்
காலச் சக்கரத்தை
நிறுத்தி
விளையாடிட
ஆசை

கணினி என்னும்
மாய மந்திரத்தை
மயக்கி
வென்றிடவே
ஆசை

காயமே இது
பொய்யென்ற
காலனின்
கடுமையை
அடக்கி ஆண்டிடவும்
ஆசை

நேயமே இல்லாத
அரக்கர்தம்
மனதை
கீறிப் பார்த்திட
வெறியான
ஆசை

பொய்ம்மையில்
மூழ்கி
தன்னலம் கருதும்
போக்கிரிகளை
மறுமையிலும்
தண்டிக்க
ஆசை

ஆசைகளை
ஆழக் குழிதோண்டி
புதைத்தால்தான்
அமைதி வரும்
என்னும்
எண்ணத்தைப்
போற்றவும்
ஆசை

இவ்வுலகில்
முடியாத
ஆசைகள்
அவ்வுலகிலாவது
நிறைவேறுமா
காத்திருக்கிறேன்
இறைவா.




      
  

  
    
    
 

   
   
   
 
 
 









  
 

Thursday, April 5, 2012

பகற்கனவு இனி வாராதுகாண்

புள்ளிமான் கூட்டம் ஒன்று
துள்ளி விளையாடிய அழகை
அள்ளிப் பருகிய காலம் அன்று

கவலைகளே மணல் மேடாகி
சவலையாகிப் போன மனதால்
திவலையாய் விழும் மழைகூட

மன ஊஞ்சலில் அமராமல்
கனவுகளும் கவலை மயமாகி
முனகிடும் வாழ்க்கை வாழும்

நிலைமாறி ஒளி வீசுமா
மலையேறி எதிர் கொண்டால்
விலையில்லா வாழ்வு மலரும்

உண்மையிது உறங்காதது
திண்மை வேண்டும் உள்ளமதில்
வெண்மதி ஒளிவீசும் வாழ்வில்

இயற்கை அழகு இனி மிளிரும்
செயற்கையில்லை செயல் திறனிது
பகற்கனவு இனி வாராதுகாண்.

 
 

Monday, April 2, 2012

ஓய்வு பெற்றவரின் கண்ணீர்

வார்த்தை வலிகள் 
கொடுத்திருப்பேன் 
நேசித்ததில் 
நிறைகுறைகள் கண்டும் 
நெஞ்சத்து அன்பு 
குறைக்கவில்லை நீ 

உழைப்புக்கு நீ 
ஒத்துழைப்பு நல்கியதில்
பாச மகவுகள் 
படிப்படியாய் 
வளர்ந்தனரே 

நிறைகுறைகள் 
வாழ்வில் நீங்கா 
நின்ற போதும் 
தோள் கொடுத்தாய் 
கல்வி ஏணி ஏறி
கரை சேர்ந்தனர் 
பிள்ளைகள் 

நிலை உயர்வு பெற்ற
மகவுகளுக்கு
மணமும் முடித்து
மகிழ்ந்த வேளையில் 
உன் மனக்குரங்கு 
வன்மம் கொண்டதேன் 

ஒத்துழையாமை 
ஆயுதம் ஏந்தினாய் 
அத்துணையும்
குற்றமென்றாய்
அடிமனது வலி 
என்று அரற்றினாய் 

உட்கார்ந்து பேசவும் 
உடன் படாததேனோ 
இருதலைக் கொள்ளி
எறும்பின் நிலை 
யாரிடமும் எதுவும் 
உரைக்க இயலாது 
ஏற்ற வாழ்வு 
அணை போட

ஓய்வு ஆய்வுக்குறியாகி
சாய்வுக்கு 
தோளில்லா நிலை 
வளமான வாழ்விருந்தும் 
குளம்நிறை சேறாகி 
தளமே ஆடுகிறது 

வேதனைகளின் வேர்களைத் 
தேடிப்பார்க்கிறேன் 
அடியும் தெரியவில்லை 
முடிவும் புரியவில்லை

போதனைகள் ஏட்டுச்
சுரைக்காய்களாய்ப்
போனதில் 
சாதனைகள் 
மழை நீர் மண்ணானதே
கண்ணீர் 
வற்றவில்லையே. 


 

 
    
 
  
 

  

என்றும் நீ என்னோடுதான்.

பார்த்தது ஒரு பெண் தான்
       பரவசமானேன்
ஈர்த்தது உன் கண்தான்
       எழில்ரசம் தான்
நீர்த்தது கனவுகள்
       நிலையிழந்தன உன்முன் 
வார்த்தது நினைவுகள்
       வசமிழந்தேன் நான்

தாயன்பு தனியன்பு
       கண்டேனே உன்னில் 
சேயன்பு சேர்ந்தன்பு
       கொண்டேனே கண்ணில்
வாயென்றும் வயிறென்றும்
       வளம்கண்ட என்னை
காயன்று கனிதானென்று
        கரைத்தாய் நீ

தெரியாமல் செய்திட்ட
        துன்பங்கள் ஒரு புறம்
புரியாமல் பேசிட்ட
         வன்மங்கள் மறுபுறம்
எரிதணலாய் மாறாமல்
         பொறுமை காத்தாய்
உரிமையில் உன் அன்பினை
          புரியவைத்தாய்

தனக்கென கேட்டிடா
          நல் தாயுள்ளம்
எனக்கென என்றிரா
          பொது உள்ளம்
பிணக்கென வந்திட்டால்
          வாதிடாமல்
மனக்குளத்தை வளமாக்கி
          வாழ்வாக்கும் நீ

தனம்பல பெற்று நான்
          தனித்தியங்கும் நிலை
மனம்நிறை மகிழ்ச்சியில்
          நீ மிளிர இப்போதேனும்
கானம்பாடி மன ஊஞ்சலில்
          களித்திருக்க
வானம்பாடியாய் வேண்டும்
          என்றும் நீ என்னோடுதான்.  




  


       
           



n

Sunday, April 1, 2012

கனவு பலிக்குமா கடவுளே

உழைத்தேன் உழைத்தேன்
உன்னதம் பெற வாழ்வில்
மறந்தேன் மறந்தேன்
காதல் என்ற ஒன்றை

காலம் கடந்து நினைத்தேன்
கோல அழகு குன்றினாலும்
கொண்ட மனையாளையே
காதல் செய்யலாம் என்று

காதல் காதல் காதல் போயின்
சாதல் சாதல் என்றேன்
போத்தல் ஏதாவது
போட்டாயா என்றாள்

கண்ணே மணியே
கற்கண்டே என்றேன்
பொன்னும் பொருளும்
வாங்கு முதலில் என்றாள்

தனித்திருக்கலாம் வா
தங்கமே என்றேன்
உன்னை மன்னித்தாலல்லவா
தொடுவதற்கு என்றாள்

நடந்ததை மறந்து உலக
நடப்புக்கு வா என்றேன்
கடந்து போன இளமை இனி
வருமா என்றாள்

மறுபிறவி இருந்து மறுபடி பிறந்து
மறக்காமல் காதல் கொள்ள வேண்டும்
வாழ்வு சிறக்க அந்தக்
கனவு பலிக்குமா கடவுளே